×

இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்த நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமர் இன்று தேர்வு: எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் தேர்வாக வாய்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து, இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்த நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தன. இத்தீர்மானம் முதலில் நிராகரிக்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு நடந்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த, நாடாளுமன்றம் நேற்று முன்தினம் காலையில் கூடி, நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடந்தது. இம்ரானின் விசுவாசியான சபாநாயகர் ஆசாத் கைசர் வாக்கெடுப்பை நடத்தாமல் பலமுறை அவையை ஒத்திவைத்தார். இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தன. இறுதியில் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக, சபாநாயகர் கைசர் தனது பதவியை ராஜினாமா செய்ய, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி எம்பி அயாஸ் சாதிக் தலைமையில் அவை நடந்தது. உடனடியாக அவர் வாக்கெடுப்பை நடத்தினார்.

இதில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி எம்பிக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதிருப்தி எம்பிக்களும் எதிர்க்கட்சி எம்பிக்களும் மட்டும் வாக்களித்தனர். மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால், இம்ரான் அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு மூலம் பதவியை இழந்த முதல் பிரதமர் இம்ரான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. இதனால், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என தற்காலிக சபாநாயகர் சாதிக் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, புதிய பிரதமர் பதவிக்கு பிஎம்எல்-என் கட்சி சார்பில் அதன் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பும் (70), இம்ரானின் பிடிஐ கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியும் மனுதாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்றுபட்டு இருப்பதால், ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், புதிய வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

* வெளிநாடு தப்புவதை தடுக்க உஷார் நிலை
இம்ரான் கான் அரசு கவிழ்ந்த நிலையில், அவருக்கு நெருக்கமான உயர் பதவிகளில் வகித்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள் வெளிநாடு தப்புவதை தடுக்க, நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகளை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான எப்ஐஏ நேற்று உஷார்படுத்தியது. ஆட்சேபனை இல்லா சான்றிதழ் இல்லாமல் எந்த உயர் அதிகாரியும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், டிஜிட்டல் மீடியா குழு தலைவருமான அர்சலன் காலித் வீட்டில் நேற்று எப்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு பிடிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* ராணுவ தளபதியை மாற்ற முயன்ற இம்ரான்
பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் நியமனத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பஜ்வாவுடன் இம்ரானுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தனது பதவிக்கு எதிராக வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கூறிய போது, பஜ்வா அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். இது இம்ரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, கடைசி சமயத்தில் ராணுவ தளபதி பஜ்வாவையே அவர் மாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், இம்ரான் பரிந்துரைத்த நபரை புதிய ராணுவ தளபதியாக நியமித்து அரசாணை வெளியிட பாதுகாப்பு அமைச்சகம் மறுத்து விட்டது. இதனால், இம்ரானின் கடைசி கட்ட அதிரடி நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் கூறப்படுகின்றன.

* இந்தியா உடனான உறவு மேம்படும்
நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்த சமயத்தில், இந்தியா - பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியுடன் நவாஸ் மிகுந்த நெருக்கம் காட்டினார். இதனால், ஷெபாஸ் பிரதமரானால் தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் மோசமான சூழலில் நல்ல ஒரு மாற்றம் இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சி தலைவர்களை அரசியல் பழி தீர்க்க மாட்டேன் என ஷெபாஸ் கூறி உள்ளார்.


Tags : Pakistan ,Prime Minister-elect ,Shebaz Sharif ,Imran Khan , Pakistan's new Prime Minister-elect Shebaz Sharif is likely to be elected today following the overthrow of Imran Khan's regime.
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை